வாஷிங்டன்

மெரிக்கா அதிபர் டிரம்ப் வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்த தகவல்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் அனைத்து உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்து இருந்த நேரத்தில் வட கொரியா அச்சம் கொள்ளாமல் ஏவுகணை சோதனை நடத்தியது.   கம்யூனிஸ்ட் நாடான வட  கொரியா மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவின் கொரோனா தாக்கம் குறித்து எவ்வித கவலையும் கொள்ளவில்லை.   இது குறித்து சர்வதேச அளவில் பல கருத்துக்கள் வெளியாகின.

வட கொரியாவின் நிறுவனரான கிம் இல் சங் பிறந்த தின விழா கொண்டாட்டம் கடந்த 15 ஆம் தேதி நடந்தது.   இதில் தற்போதைய அதிபரும்  கிம் இல் சங் பேரனுமான கிம் ஜாங் உன் கலந்துக் கொள்ளவில்லை.  இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் அமெரிக்க செய்தி ஊடகம் வட கொரிய அதிபருக்கு  இதய அறுவை சிகிச்சை நடந்ததால் அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து செய்தியாளர்களிடம், “தற்போது வட கொரிய அதிபர் உடல்நிலை குறித்து வரும் செய்திகளை நான் மறுக்கவும் இல்லை, அவை உண்மை எனச் சொல்லவும் இல்லை.   பல அறிக்கைகள் இது குறித்து வந்த போதிலும் உண்மை நிலை தெரியாமல் உள்ளது.

நான் வடகொரிய அதிபருடன் நல்ல நட்பு கொண்டவன்.  எங்கள் இருவருக்கும்,போர் செய்யும் மன நிலை இல்லை.  இருவரில் ஒருவருக்கு அப்படி இருந்தாலும் போர் நடந்திருக்கும்.  ஆனால் நாங்கல் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு நெருக்கமாகி  விட்டோம்.

உண்மையிலேயே கிம் ஆபத்தான நிலையில் இருந்தால் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகின்றேன் .   ஆனால் அவர் உடல் நிலை குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.  அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  அது தவறானது எனக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.