புத்ராஜெயா :

லேசியாவில் பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான அதேவேளையில், ஊரடங்கு நேரத்தில் இவர் வீடு வீடாக சென்று சேவை செய்ததும் தெரியவந்திருக்கிறது.

மார்ச் 18 முதல் மலேசியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு வீடு வீடாக சென்று முடிதிருத்தம் செய்துவந்துள்ளார்.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, புதனன்று (ஜூன் 10) சலூன் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, கடைகளை திறப்பதற்கு முன் ஊழியர்கள் அனைவருக்கும் கடை முதலாளிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்ற மலேசிய அரசின் உத்தரவால் இவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது வியாழனன்று (ஜூன் 11) உறுதியானது.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஊரடங்கு நேரத்தில் அவர் 21 நபர்களுக்கு முடிதிருத்தியது தெரியவந்தது, அது தவிர கடை திறந்த இரண்டு நாளில் 15 பேர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த நபருடன் அறையில் தங்கியிருந்த 4 பேர் உட்பட மொத்தம் 40 பேர் தற்போது தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

இந்த தகவலை மலேசிய சுகாதார அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார், “வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் அனைத்து முதலாளிகளும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம்” என்று கூறியவர், “ஊரடங்கு நேரத்தில் இந்த தொழிலாளி வீடு வீடாக சென்று சேவை செய்தது சட்டவிரோதம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “இவருக்கு எங்கிருந்து வைரஸ் தொற்றியது என்பது இதுவரை தெரியவில்லை, இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று டத்துக் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.