தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர்…

Must read

கரூர்: கரூரில் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும்,
 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை  என தெளிவுபடுத்தினார்.

தமிழக முதல்வர் இன்று கரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  இன்று காலை 11 மணிக்கு சேலத்தில் இருந்து கார் மூலம் கரூர் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட் டிருந்த விழா மேடையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் சார்பில் ரூ.627 கோடி மதிப்பிலான 2,089 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித்துறை, போக்குவரத்துத்துறை, பொது சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.118.53 கோடி மதிப்பிலான 28 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன் பின்பு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள், தற்போதைய நிலவரம் எப்படி உள்ளது, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவன நிர்வாகிகள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

அரசு எடுத்த நடவடிக்கையால் கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசே மக்களை  நாடி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. கரூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, கரூரில் விசாரணை நீதிமன்றம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்தில் மக்களின் கோரிக்கைகள் தொடர்பான சுமார் 24 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

மேலும,  அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றவர்,  கரூரில் அதிக அளவில் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

பின்னர் கொரோனா தடுப்பூசி, விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை  என தெளிவுபடுத்தியவர்,  வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கவில்லை, தரகர்கள்தான் எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்வைத்து சிலர், வேளாண் சட்டங்களைக் கொண்டு விஷமத்தனமான பிரசார அரசியல் செய்கிறார்கள்.

இவ்வாறு  கூறினார்.

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி! எடப்பாடியின் அசத்தல் அறிவிப்பு!

More articles

Latest article