வாஷிங்டன்

மெரிக்காவுக்கு கொரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அரசு கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்குப் பயண கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் முழுமையாகத் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் நீக்கப்படும் என்று ஏற்கனவே அமெரிக்கா கூறியிருந்தது.

அதன்படி தடுப்பூசி சார்ந்து பாதுகாப்பான முறையில் வெளிநாட்டினர் அமெரிக்கா வந்து செல்லும் வகையில் புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார்.  இதில் 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் சில மருத்துவ காரணங்களுக்காகச் சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றைக் காட்ட வேண்டும். அல்லது கிளம்புவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றைப் பெற வேண்டும். இந்த புதிய நடைமுறைகள் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளன.