சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதையடுத்து, கடந்த 19ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். சிறப்பாக செயல்பட்டதற்காக மருத்துவ நிபுணர்கள் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் தான் இன்று கொரோன நடவடிக்கையில் முன்னோடி. 97,000 நபர்களுக்கு தற்போது வரை தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் சுகாதாரத்துறை மட்டும் இன்றி, பிற துறை சார்ந்த முன் கள பணியாளர்களுக்கு கொரோன தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காவல்துறையை சேர்ந்த 1.5 லட்சம் பேர் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர். ராஜா முத்தையா கல்லூரி சுகாதார துறை கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் பரிசீலனை செய்வார். நிச்சயம் நல்ல செய்தி வரும். முதல் கட்டமாக 1500 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.மீதம் உள்ள நபர்களுக்கு படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறினார்.