பூனா: ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, முதலில் இந்தியாவிற்குள் விநியோகிப்பதுதான் சீரம் நிறுவனத்தின் முதல் முன்னுரிமை என்று அறிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவல்லா.
மருந்துகள் தயாரிப்பில், உற்பத்தி அளவில், உலகின் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது புனேவை தலைமையமாகக் கொண்ட சீரம் நிறுவனம்.
இந்நிலையில், ஆஸ்ட்ராஸெனகா பிஎல்சி -யின் கொரோனா தடுப்பு மருந்தை, பிற நாடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு முன்பாக, இந்தியாவிற்குள் விநியோகம் செய்வதற்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது அந்நிறுவனம்.
ஆதர் பூனவல்லா கூறியிருப்பதாவது, “கொரோனா தடுப்பு மருந்தை, நமது நாட்டிற்குள் முற்றாக விநியோகித்து, நமது நாட்டை காப்பதுதான் முதல் கடமை. அதன் பிறகுதான், மற்ற நாடுகளுடனான ஒப்பந்தமெல்லாம்” என்றுள்ளார் அவர்.
ஆஸ்ட்ராஸெனகா, தனது தடுப்பு மருந்து 90% பயன்தரக்கூடியது, செலவு குறைவானது மற்றும் விநியோகிப்பதற்கு எளிதானது என்று அறிவித்த குறுகிய காலத்திற்குள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆதர் பூனவல்லா.