சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தடுப்பூசியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை முதல், இன்று 3வது நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் சென்னையில் மட்டும்மல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 84நாட்களை கடந்து 2வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருப்போர், தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
அதே வேளையில், சென்னையில் வணிகர்களுக்கு சிறப்பு முகாம்களும், உதயநிதியின் தொகுதியில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது மற்ற பகுதி மக்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசிக்கா ஏராளமானோர் காத்திருக்கும் சூழலில், அரசும், மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு அடுத்தக்கட்ட தடுப்பூசிகள் வரும் 10ந்தேதிதான் வர இருப்பதாகவும், அதன்பிறகே தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி வர இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் அதில் இதுவரையும் இரண்டு தவனையாக 7,86,610 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வந்துள்ளது. குறிப்பாக ஜூலை 1 ஆம் தேதி 36,610 டோஸ் கோவாக்ஸின் மற்றும் 6,00,000 டோஸ் கோவிஷில்டு மற்றும் ஜூலை 2 ஆம் தேதி 1,50,000 டோஸ் கோவிஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது. மீதம் வர வேண்டிய தடுப்பூசிகளை விரைவில் அனுப்ப வலியுறுத்தியும், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி மத்திய அமைச்சரை சந்திக்க, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை டெல்லி செல்கிறார்.
இதற்கிடையில், தமிழகத்திற்கு மொத்தமாக 1,57,76,550 வந்துள்ள நிலையில் நேற்று வரையும் 1,59,30,132 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசி வரை செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறப்பிடத்தக்கது.