சென்னை:
கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் எப்படி உள்ளது, எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்ற தற்போதைய (2-4-2020) விவரம் வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்:
கொரோனா நோய் பாதிப்பு காரணமாக 8 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மேலும், மாவட்டம் முழுவதும் 3,700 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வரப்படுவதாகவும் கூறி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம்:
காஞ்சிபுரத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அதையடுத்து, காஞ்சி நகரில் உள்ள நான்கு ராஜவீதிகள், காமராஜர் சாலை, காந்தி சாலை, பச்சையப்பன் சாலை, உத்திரமேரூர், வந்தவாசி, செங்கல்பட்டு, தாம்பரம் திருவண்ணாமலை செல்லும் முக்கிய நெடுஞ் சாலைகள் , நகருக்குள் இருக்கும் குறுக்கு தெருக்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், ராஜாஜி மார்க்கெட் பகுதி முழுவதும் மூட காவல்துறை உத்தரவிட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம்:
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் டெல்லி நிஜாமுதின் மாநாட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
விசாரணையில் அந்த நபர்கள், குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் குடியாத்தம் வட்டாச்சியர் வச்சலா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் சுற்றி வரும் நிலையில், அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.