சென்னை:  சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் இதுவரை 35% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக  மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையிலேயே அதிகமாக உள்ளது. இதுவரை 1,76,779 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3336 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 1,60,333 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 13,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், குறைந்து வந்த தொற்று பாதிப்பு தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக மீண்டும்,  அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தெருத்தெருவாக சோதனை நடத்தி வருகிறது. அதன் படி, குடியிருப்பு பகுதிகளுக்கே என்று கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் இதுவரை 35% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும்,  கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வரையில் சென்னை மருத்துவ முகாம்களில் 28,71,934 பேர் கலந்து கொண்டதாக  தெரிவித்துள்ளது.
இதுவரை எடுக்கப்பட்ட 1,61,494 மாதிரிகளில் இருந்து 26,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கொரோனா உறுதியாகும் விகிதம் 16% ஆக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது.
தேனாம்பேட்டை மற்றும் திரு.வி.க நகரில் நடத்தப்பட்ட சோதனைமுகாம்களில் அதிகமான மக்கள்  கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் முகாம்களில் கலந்து கொண்ட நிலையில், அது தற்போது 13 ஆயிரமாக குறைந்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.