சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுரை கூறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனாவின் தாக்கம் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் இருந்ததை போல் தீவிரமாக இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தொடர்பான நோய், நாள்பட்ட நோய்கள் இருப்போர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச்ர மா.சுப்பிரமணியன், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரத்தன்மை கொண்டதல்ல என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து மாதிரிகள் புனேவின் வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு சிலரு ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தவர், கொரோனா பரவல் தமிழ்நாட்டில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், சுகாதாரத் துறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களில் முககவசங்களை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.
ஜூன் 6)நிலவரப்படி, இந்தியாவில் 5,364 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரம் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். கேரளா 1,679 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (615), மேற்கு வங்கம் (596), டெல்லி (562), மற்றும் மகாராஷ்டிரா (548) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 221 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் காய்ச்சல், இருமல் அல்லது உடல் வலி இருந்தால் முன்கூட்டியே மருத்துவ உதவியை நாட வேண்டும் மற்றும் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே மருத்துவமனைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் நெரிசல், கூட்டம் அதிமுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்”-
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
முககவசங்கள் தற்போது கட்டாயமில்லை என்றாலும், தடுப்பு நடவடிக்கையாக அதை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
வளர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் அதிக ஆபத்துள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்த நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.