டில்லியில் திரையரங்குகள், மால்கள், மெட்ரோ ரயில்  மூலம் கொரோனா அதிகம் பரவல்

Must read

டில்லி

டில்லி நகரில் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  பெருநகரங்களான மும்பை, டில்லி, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தினசரி பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  இந்தியத் தலைநகர் டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டில்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டுகிறது.  நேற்று வரை டில்லியில் 6.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 6.35 லட்சம் பேர் குணமாகி உள்ளனர்.  நேற்றைய கணக்குப்படி டில்லியில் 4400க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.  இதையொட்டி டில்லியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சோதனை நடத்தத் தொடங்கப்பட்டுள்ளது.    இந்த பரவல் அதிகரிப்பு கொரோன இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.   வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருவோர் கட்டாய கொரோனா சோதனை செய்யப்படுகின்றனர்.

கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களாகத் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றை அரசு குறிப்பிட்டுள்ளது.  இந்த பகுதிகளில் திடீர் கொரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன.    ஏற்கனவே கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டில்லி அரசு ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article