சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,752 பேருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,61,072 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தொற்று பாதிப்பில் இருந்து 514 பேர் குணம் அடைந்த நிலையில், இதுவரை 2,43,909பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்றும் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 4,302 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் 12,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
‘சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதாரத்துறையினர்,. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைளில் உள்ள கொரோனா வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு கிண்டி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரு மருத்துவமனைகளிலும் அனைத்து படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளன. ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றிலும் சுமார் 80 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்டன. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதில் கடும் சவாலான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலானவற்றில் படுக்கைகள் நிரம்பி உள்ளன. பிரபல மருத்துவமனைகளில் தற்போது கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் கொரோனா பரவலின் 2-வது அலையில் சிக்கும் நோயாளிகள், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மீண்டும் கல்லூரிகள், பள்ளிகளில் கொரோனா வார்டுகளை அமைக்கலாமா என்பது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. பலருக்கு வீடுகளிலேயே சிகிச்சை பெறும் வகையில் மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர்.
இதுதவிர வீடுகளிலேயே ஆவி பிடித்தல், வாய் கொப்பளித்தல் போன்ற சிகிச்சை முறைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள கொரோனா பாதிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே கொரோனா பாதிப்புக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.