சென்னை: கொரோனா 2வது தவணை ரூ.2000 வழங்கப்படுவதை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அத்துடன், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் ஜூன் 3-ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா 2வது அலை தமிழகத்தில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 24ந்தேதி முதல் ஒருவாரலம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 15 நாட்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ரூ.2000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு விட்டது. இந்த நிதியின் 2-வது தவணை ஜூன் 3ம் தேதி வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும், 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஜூன் 3-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.