சென்னை: தமிழகத்தில் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். ஆனால்,  ஜூன் 3ந்தேதி மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள்  கொண்டாடப்பட உள்ளதால், ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-

நேற்று செங்கல்பட்டில் HLL நிறுவனத்தை ஆய்வு மேற்கொண்டேன். இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்சிஜன் கிடங்கை ஆய்வு செய்தேன். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேமம் கிராமத்தில்  ஊரகப் பகுதிகளில் தடுப்பூசி போட கூடிய பணியை தொடங்கி வைத்துள்ளேன்.

அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களையும், அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் நான் தொடர்ந்து அறிவுறுத்தி இருக்கிறேன்.அதன் அடிப்படையில்தான் நானே இன்று நேரடியாக இந்த பகுதிக்கு வந்து குறிப்பாக  ஊரகப் பகுதிகளில் தொடங்கி வைத்திருக்கிறேன்.

கொரோனா தொற்று நோய் பரவுவதைத்தடுப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை  பாதுக்காப்பது இந்த இரண்டு இலக்கோடு தமிழக அரசு முழு மூச்சோடு செயல்பட்டு வருகிறது. தொற்றை  தடுப்பதற்கு நோய் பரவக்கூடிய சங்கிலியை உடைக்க வேண்டும். அதற்காக தான் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த முழு ஊரடங்கு எந்த தளர்வும் இல்லாமல் அமல்படுத்திய காரணத்தினால் கடந்த இரண்டு நாட்களாக அதனுடைய பயன் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுப்பயனையும் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

மக்கள் அனைவரும் முழு ஊரடங்கு கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காக்க ஏராளமான மருத்துவ உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொற்று குறையும். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். ஆக்சிஜன் தட்டுப்பாடு கடந்த காலங்களில் இருந்தது உண்மை. தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் தடுப்பூசி வீணாக்குவது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட முன்வர வேண்டும்.

18 முதல் 45 வயதினருக்கு செலுத்த 3.14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 1.64 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வாங்கப்படும். தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கு  நீடிக்கலாம் என சட்டமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. சட்டமன்றக் குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருப்பெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு (inox air products) ஆலையை பார்வையிட்டர். நிறுவனத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி – நிரப்பப்படும் பணிகளை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின், தமிழகத்தில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு பெருமளவில் தீர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.