டெல்லி:

டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை முறையால்  கொரோனாத் தொற்றாளர் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

49 வயதான ஒருவர் தீவிர உடல்நலக் குறைவால் மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 4 அன்று அனுமதிக்கப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டார்.

சில நாட்களில் அவருக்கு நிமோனியா தொற்றும் ஏற்பட்டு உடல்நிலை மேலும் மோசமானதால் ஏப்ரல் 8 முதல் செயற்கை சுவாசம் தரப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் பிளாஸ்மா கொடையாளியை ஏற்பாடு செய்தனர். அவருக்கு மஞ்சள் காமாலை, எயிட்ஸ் உள்ளிட்ட சோதனைகள் முடிந்தபிறகு பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு நோயாளியின் உடலில் இம்மாதம் 18 ஆம் தேதி செலுத்தப்பட்டது. ஞாயிறன்று அந்த நபர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்தார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மேக்ஸ் ஹெல்த் கேர் குழுமம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்னல் மெடிசினின் முதன்மை இயக்குனருமான சந்திப் புத்திராஜா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.  சவாலான இந்த சூழலில் புதிய சிகிச்சை முறையின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் மற்றொரு நோயாளியும் முழுமையாக குணம் பெற உள்ளார்” என்று கூறினார்.