சென்னை
சென்னையைச் சேர்ந்த 56 வயதான கொரோனா நோயாளி நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு 109 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த முகமது முத்திஜா என்பவர் கடந்த ஏப்ரல் இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட்டார். சுமார் 56 வயதாகும் இவருக்கு இரு நுரையீரல்களும் கொரோனாவால் பழுதடைந்து விட்டன. அவருக்குத் தினமும் 10 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்பட்டதால் ரெலா மருத்துவமனையில் அவருக்கு எக்மோ எனப்படும் செயற்கை நுரையீரல் சிகிச்சையில் வைக்கப்பட்டார்.
அவருக்கு மாற்று நுரையீரல் பொருத்துவது அவசியம் என்பதால் அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். கொரோனா இரண்டாம் அலை அப்போது அதிகரித்ததால் அவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்கவில்லை. ஆயினும் நம்பிக்கையைக் கைவிடாத மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளித்து ந்தனர். அவர் 9 வாரங்களுக்குப் பிறகு தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார்.
இன்னும் சக்கர நாற்காலியில் உள்ள முகமது, “இது எனது இரண்டாம் பிறவி ஆகும். மருத்துவர்கள் சொற்படி நான் நடந்தேன். அனைத்து முயற்சிகளையும் நான் கடவுளின் பொறுப்பில் விட்டு விட்டேன். நான் சுயநினைவின்றி இருந்ததால் எனது மனைவி என்னைக் கவனித்துக் கொண்டார். நான் விளையாட்டு வீரர் என்பதால் உடல் பலத்துடன் இருந்தேன். இனி நான் எனது பணியை தொடங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முகமதுவின் மகள் மார்சுகா தங்கள் வீட்டில் தனது தந்தைக்காக உடற்பயிற்சி சாலை ஒன்றை அமைத்துள்ளார். எக்மோ சிகிச்சைக்காக மாதம் ரூ.40 லட்சம் வரை அவர் செலவழித்துள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமில்லை எனவும் தங்களுக்கும் இது மிகவும் கடினமாக இருந்தாலும் தந்தை உயிரைக் காக்க இந்த செலவை செய்துள்ளதாக மார்சுகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
முகம்மதுவுக்குச் சிகிச்சை அளித்த ரெலா மருத்துவமனை இயக்குநர் முகமது ரெலா, “எக்மோ சிகிச்சை பெறும் அனைத்து நோயாளிகளுக்கும் நுரையீரல் மாற்றுச் சிகிச்சை தேவைப்படாது என தற்போது இவர் நிரூபித்துள்ளார். ஒரு சில நோயாளிகள் மாற்று நுரையீரல் இல்லாமலே குணம் அடையலாம் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா புதிய நோய் என்பதால் இது குறித்த தெளிவு நமக்கு இன்னும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.