டில்லி
கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 3.2 கோடி நடுத்தர மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடெங்கும் உள்ள அனைத்து அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிலகங்கள் போன்றவை மூடப்பட்டு பலர் பணி இழக்கும் நிலை ஏற்பட்டது. பலருக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் கடும் ஏழ்மையில் சிக்க நேர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள பியு ஆய்வு மையம் இது குறித்து ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் காணப்படுவதாவது :
கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் கடும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகினர். கடந்த 2011 முதல் 2019 வரை சுமார் 5.7 கோடி மக்கள் நடுத்தர வகுப்பு நிலைக்கு உயர்ந்தனர். கொரோனா ஊரடங்கு தொடங்கிய போது நடுத்தர வருமான பிரிவில் சுமார் 9.9 கோடி பேர் இருந்தனர்.
அது கொரோனா காலத்தில் குறைந்து 6.6 கோடி பேர்கள் ஆகி உள்ளது. கிட்டத்தட்ட 3.2 கோடிக்கும் மேல் நடுத்தர வருமான பிரிவில் இருந்து ஏழைகள் பிரிவுக்கு சென்றுள்ளனர். இந்தியாவில் தனி மனித வருமானம் 10$ இருந்து 20$ ஆக இருந்த நிலையில் இவர்களது வருமானம் இந்த ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம் வெளியான கணிப்பில் 2020 ஆம்வருடம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முறையே 5.8% மற்றும் 5.6% ஆக இருக்கும் என உலக வங்கி கணித்திருந்தது. ஆனால் உண்மையில் சீனாவில் 2% வளர்ச்சியும் இந்தியாவில் -9.6% வளர்ச்சியும் அதாவது முன்பை விட 9.6% குறைவாகவும் இருந்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஊரடங்கு விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் மத்திய மோடி அரசு எரிபொருள் விலையைக் கடுமையாக உயர்த்தி உள்ளது. எனவே இந்த பொருளாதார பாதிப்பு குறைவதற்குப் பதில் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் கொரோனா கால கட்டத்தில் உண்டான பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகையில் இந்தியாவில் குறையாமல் உள்ளது.