பீஜிங்: உலக நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,  அமெரிக்கா உள்பட மேலும் சில   மீண்டும் கொரோனா  அதிவேகமாக  பரவுகிறது. இதனால், இந்தியாவிலும் அலர்ட்டாக இருக்க  மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

2019 இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில்  பரவிய கொரோனா தொற்று கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டி போட்டதுடன் உலக பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றியது. கடும் பேரழிவை ஏற்படுத்தியது.  தொற்று பரவலை தடுக்க இந்தியா உள்பட உலக நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, அதை எடுத்துக்கொண்டதால், தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. தடுப்பூசிகள் போடப்போட தொற்றுபரவலும் குறைந்து, தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால், பல பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், மக்களுக்கு மீண்டும் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்த தொற்று காரமாக 60% சீன மக்கள் பாதிக்கப்படுவர் என  தொற்றுநோய் நிபுணரும், சுகாதாரப் பொருளியல் வல்லுநருமான எரிக் பெய்கிள் டிங், வால் ஸ்டீரிட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்  தெரிவித்து உள்ளார். மேலும்,  சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, பெய்ஜிங்கில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைகளில் அதிகம் காணமுடிகிறது. இதேநிலை நீடித்தால், சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விஷய மாகும் என்று கூறினார்.

வால் ஸ்டீரிட் ஜர்னல் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், ”சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை 4 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்ததாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கரோனாவால் உயிரிழப்போர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து,  ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது. அங்கும் தொற்று பரவலை தடுக்க மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் முடுக்கி விட்டுள்ளது. அதுபோல இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்தியஅரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.