சென்னை: ஒரு மாதமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதுகுறித்து காரணத்தை உடனே கண்டறியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்ததால், தமிழ்நாடு அரசு தளர்வுகளை அதிக அளவில் வழங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத்தொடங்கியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இன்று உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்று கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை துவக்கி வைத்ததாகவும், மருத்துவத் துறையில் முன்கள பணியாளர்களுக்கும் இன்று மஞ்சள் காமாலை தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தை பொறுத்தவரை குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை நேற்று 103 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு போன்ற மாவட்டத்தில் தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதுகுறித்த காரணங்கள் கண்டறிய அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவிட்டுள்ளதாக.
கேரளாவில் பெரியளவு தொற்று அதிகரித்ததற்கு வீடுகளில் தங்கி சிகிச்சை பெருவது தான் காரணம் என்றவர், தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றவர், முகக் கவசம் அணிவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார். பொதுமக்கள் தொற்று முடிவுக்கு வந்துவிட்டது, இனி யாரையும் எதுவும் செய்யாது என இருக்க கூடாது என்றவர், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் துவக்கி வைப்பதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை கண்டறிய, அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதை தொடர்ந்து வருகிறோம் என்றவர் கேரளாவில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அவசியமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.