சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால்,  சென்னை உள்பட முக்கிய இந்து கோயில்களில் பொதுமக்கள் நேரடி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு நேரடியாக அறிவிக்காமல், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையின் முக்கிய மார்க்கெட் பகுதிகளில் கடைகளை திறக்க ஆகஸ்டு 9ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியாவிட்டால்  அபராதமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது ஆடி மாதம் என்பதால், முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதை தடுக்கும் வகையில் பிரபலமான கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில்  முருகன் கோவில்களில் மக்கள் கூடுவது வழக்கம். மேலும், ஆடி மாதத்தையொட்டி, அம்மன் கோவில்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வாடிக்கை. இதை தடுக்கும் வகையில்,  முக்கிய கோயில்களில் வரும் 9ம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஆகமவிதிபடி, கால பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன்கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2ம் தேதி முதல் 9 ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோல் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.