சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், மாநிலம் முழுவதும் மே 8-ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கொரோனா 4வது அலை இந்தியாவில் பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மீண்டும் மே 8ந்தேதி கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களில் பலர் வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். வடமாநிலங்களில் இருந்து தொழில்புரிய வந்தவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், இனிமேல் வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 1.46 கோடி பேர் சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி என்பது அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.