திடீர் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து EPF நிறுவனம் தனது சந்தாதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, இவர்கள் செலுத்திய சந்தாவிலிருந்து உடனடியாக பணம் எடுத்துக்கொள்ள ஒரு சலுகையை அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு சந்தாதாரரும் மூன்று மாத ஊதியம் அல்லது செலுத்திய தொகையில் 75% (இதில் எது குறைவோ அதை) எடுத்துக்கொள்ளலாம்.

இதன்படி இதுவரை 7.4 லட்சம் சந்தாதாரர்கள் ரூ. 2300 கோடி வரை எடுத்துள்ளதாக EPF நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக 12.9 லட்சம் பேருக்கு ரூ. 4,685 கோடி ரூபாயினை செட்டிலும் செய்துள்ளது. இத்தொகையில் கொரோனாவிற்கான சிறப்பு சலுகையின் படி மட்டும் செய்யப்பட்ட ரூ. 2,368 கோடி முழுத்தொகையில் 57% ஆகும் என்று ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு சலுகை மூலம் தோராயமாக ஒவ்வொருவரும் ரூ. 32,000/- பெற்றுள்ளனர். தங்களது வாழ்நாள் சேமிப்பிலிருந்தே மக்கள் இந்தளவு தொகையை எடுத்துள்ளது, மக்களின் பணத்தேவையை இந்த கொரோனா தொற்று எந்தளவு பாதித்துள்ளது என்பதையே காட்டுகிறது என்கின்றனர் இவ்வலுவலக அதிகாரிகள்.

இந்நிறுவனத்திலிருந்து அறக்கட்டளைகளின் (Trust) கீழ் விலக்கு பெற்றுள்ள TCS, HCL, HDFC, ONGC, NLC மற்றும் BHEL போன்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் கூட இந்த சலுகையை பயன்படுத்தி யிருப்பதன் மூலம் உயர்பதவிகளில் வகிப்போரை கூட இந்த நெருக்கடி பாதித்துள்ளதை அறிய முடிகிறது.

ஏப்ரல் 27 வரை இவர்களை போன்ற 79743 பேருக்கு ரூ. 875.5 கோடி இந்த சிறப்பு சலுகை மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 22 தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 55000 பேர் பயனடைந்துள்ளதாக என்று தெரிவிக்கிறது EPF நிறுவன செய்தி குறிப்பு ஒன்று.

– லெட்சுமி பிரியா