திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கொரோனா சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ், இணையதளபதிவு போன்றவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முடிவடைந்த ஆனி மாத பூஜை வரை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனிபாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஜூன் 14-ந் தேதி நடை திறக்கப்பட்டு 19-ந் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம்.
இந்த நிலையில், சபரிமலை வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தேவசம் போர்டு அறிவித்த உள்ளது. சபரிமலையில், ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது. இதையொட்டி தேவசம் போர்டு தளர்வு வழங்கி உள்ளது.
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருப்பது அவசியம் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு, நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தி உள்ளதுடன், கொரோனா சான்றிதழ் தேவையில்லை என்று அறிவித்திருப்பதுடன், ஏதாவது ஒரு அடையாள அட்டை தேவை என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் அறிவிக்கப்பட்டுள்ளது.