பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கு தெற்காசிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது வழக்கம்.

இந்த பணியாளர்களுக்கு அதிக வேலை மற்றும் குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்டாலும்கூட, தங்கள் சொந்த நாட்டின் நிலைமை காரணமாக, அவர்கள் இந்த வேலையை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும், சொந்த நாட்டில் வாழும் தங்கள் குடும்பத்தினருக்கு பலவகைகளிலும் உதவுகிறது அவர்களின் அந்த வருமானம்.

பிள்ளைகளின் படிப்பு செலவு, வயதானப் பெற்றோர்களின் மருத்துவ செலவு, திருமணச் செலவுகள், சுயதொழில் தொடங்குதல் போன்றவைகளை அவற்றுள் முக்கியமானதாக கருதலாம். ஆனால், தற்போதைய கொரோனா முடக்கமானது, இவர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு உலைவைத்து விட்டது.

அவர்களில் பலருக்கு ஊதியமற்ற விடுப்பு அளிக்கப்படுவதுடன், பலர் தங்களின் தாய்நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களின் வாழ்விற்கு ஆதாரமாக இருந்த வருவாயை அவர்கள் இழக்கும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது கொரோனா முடக்கம்.