டெல்லி: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து,  அங்கு பள்ளிகளுக்கான புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில், அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மக்கள் இயல்புவாழ்க்கை திரும்பியது. இருந்தாலும் சில மருத்துவ நிபுணர்கள் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் இன்னும் சில காலம் முகக்கவசம் அணிவது நல்லது என தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த ஒருவாரமாக தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தெற்கு டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மற்றும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அந்த வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  டெல்லியில் கடந்த திங்கட்கிழமை பாதிப்பு 137 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து உயர்ந்து நேற்று 325 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 42 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

அதுபோல அரியானாவிலும் தொற்று அதிகரித்துள்ளது. குஜராத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அங்கு அதற்கு முந்தைய வாரத்தில் 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

டெல்லியில் வியாழக்கிழமை 325 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 2.39% ஆக இருந்தது, இதையடுத்து டெல்லியில் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கொண்டுவர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா,  ‘‘கொரோனா பாதிப்புகள் லேசான அளவில் அதிகரித்து உள்ளன. ஆனால், மருத்துவமனையில் சேருவது அதிகரிக்கவில்லை. அதனால், நாம் கவலை கொள்ள வேண்டாம். அச்சமடைய தேவையில்லை. ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் உள்ள சூழலில், அதனுடன் வாழ நாம் பழகி கொள்ள வேண்டும். நிலைமையைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். பள்ளிகளுக்கான ஒரு பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும்’’ எனக் கூறியுள்ளார்.