சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், டெல்லி தப்லிக் ஜமாத் மத கூட்டத்தில் பங்கேற்றவர்களின் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், பிரதமருடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, என்பதுபற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நாட்டில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும், ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், தற்போதைய நோய் தொற்று தீவிரம், அதை தடுக்க வேண்டியது குறித்தும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ காண்பரன்சிங் போது, பிரதமர் உள்பட அனைவரும் சமூக விலகலை கடைபிடித்தனர்.
தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில், தமிழக முதல்வருடன் நடத்திய ஆலோசனையின்போது, அது குறித்து கேட்டறிந்ததாகவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.