சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில்  பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல எச்டிஎஃப்டிசி வங்கியும், ரூ.150 கோடி நிதியுதவி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பிரதமர் மோடி பொதுமக்கள் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று பல தரப்பினர் நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளது. இதுகுறித்து,  வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் எங்கும் சுமார் 194 நாடுகளில், 8 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு பரவியுள்ள, இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் தன்னலம் கருதாமல் 24 மணி நேரமும் சேவை செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு நாம் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே தேச நலனில் அதிகம் அக்கறை கொண்ட மெர்க்கன்டைல் வங்கி, நாடு எதிர்கொண்டுள்ள கொேரானா ஒழிப்பு போராட்டத்திற்கு ரூ5 கோடி நன்கொடையாக வழங்குகிறது என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல  கொரோனா தடுப்பு பணிகளுக்காக  எச்டிஎஃப்சி வங்கி குழுமம் சார்பில் ரூ.150 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.