‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான  மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து உள்ளார்.

தோனியின் அறிவிப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டு மல்லாமல், அடுத்த உலக கோப்பை போட்டியில் கோப்பை வென்று ஓய்வுபெறுவார் என எதிர்பார்க் கப்பட்ட நிலையில், அவரது திடீர் ஓய்வு அறிவிப்பு, விசில் போடும்  கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த  ஏமாற்றத்தை கொடுத்து உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் கால் பதித்த தோனி, அதிரடி ஆட்டத்தாலும், இக்கட்டான நேரத்தில், அசால்டாக ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு வந்தவருமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கிரிக்கெட் ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில், தனி அத்தியாயம்.

இந்திய அணியில் சேர்ந்த மூன்றே ஆண்டில் அணியின் கேப்டன் பதவிக்கு உயர்ந்தவர் தோனி.  2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் இந்திய அணி 3 கோப்பைகளை வென்று வரலாற்று  சாதனை படைத்தது. இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு உள்ளது.

2007 டி20 உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை என மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்து சாதனை படைத்தார். இந்திய கிரிக்கெட் அணியில், இதுவரை அனைத்துவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை முதலிடத்துக்கு வழிடநடத்திச் சென்றவர்.

(2007 ICC Men’s T20 World Cup, 2011 ICC Men’s Cricket World Cup, 2013 ICC Champions Trophy)

இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வந்த தோனி,  கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன்சிப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து,  2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன்சிப் பதவியில்  இருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

ஐபிஎல் போட்டிகளில் 3 முறை  கோப்பையை வென்றுள்ளார்.

இருந்தாலும் தோனியின் சாதனைகள் ஒன்றும் குறைந்தது இல்லை.  ஒருநாள் போட்டிகளில் அதிக மாக 50 ரன்களுக்கும் மேல் குவித்தவர்கள் பட்டியலில் தோனி 82 50+ ரன்களுடன் பதினோராம் இடத்தில் இருக்கிறார்.  96 இன்னிங்க்ஸ்களில் 10,723 ரன்கள் குவித்துள்ளார்.

தோனி தான் ஆடியதில் பெரும்பாலான போட்டிகளில் ஐந்தாம் அல்லது ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கி இத்தனை ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சராசரி பத்தாயிரம் ரன்களுக்கும் மேல் குவித்த வீரர்கள் பட்டியலில், கோலி அதிக சராசரி (59) வைத்துள்ளார். அவருக்கு அடுத்து தோனி 50 ரன்கள் சராசரியுடன் இருக்கிறார்.

தோனி பத்து சதங்கள் மட்டுமே அடித்திருந்தாலும், நாட் அவுட்கள் மூலம் அதிக சராசரி வைத்துள்ளார்.

சமீபகாலமாக பல போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வந்தவர் ஒருசில போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வந்தது.

இதனால், அவரது ஆட்டம் குறித்து சில மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தோனி உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. அவர் தானாக விலகாவிட்டால், இந்திய அணியில் இருந்து தோனியை நீக்க வேண்டும் என்று சிலரும் குரல் எழுப்பத் தொடங்கினர்.

ஆனால், தோனி  விருப்பப்பட்டு ஓய்வு முடிவை அறிவிக்கும் வரை இந்திய அணியில் தொடர வேண்டும் என்றும், அடுத்த உலக கோப்பை வரை அவர் ஆட வேண்டும், கோப்பையை வென்று தர வேண்டும் என அவரது  ரசிகர்கள்  வலியுறுத்தி வந்தனர்.

இந்த சூழலில்தான், கடந்தஆண்டு, செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ஓய்வுபெறுவது தொடர் பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தன் கருத்தை உறுதிப்படுத்தினார்.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற   உலக கோப்பை போட்டியில், தோனியின் மந்தமான பேட்டிங் மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளானது.

ஆனால், இதுகுறித்து கூறிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், அடுத்த உலக கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற வாய்ப்பிருப்பதாக கூறினார். மேலும்,  தோனி எடுப்பதுதான் ஓய்வு முடிவு. அவரது முடிவை சார்ந்தே அவரது ஓய்வு இருக்கும்.  அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்வார் என்பதை கணிப்பது கடினம். கேப்டன்சியில் இருந்து விலகியதை போலவே ஓய்வு முடிவையும் திடீரென அறிவிக்கக்கூடும் என தெரிவித்திருந்தார்.

ஆனால், கடந்த ஜூலை 7ம் தேதி தன்னுடைய 39வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் உற்சாக மாக கொண்டாடிய தல தோனி, அப்போதுகூட எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாமல், எப்போதும் போலவே இயல்பாககவும், உற்சாகம் இருந்தார். அவரது பிறந்தநாளை  சக வீரர்கள், மட்டுமின்றி உள்ளூர் ரசிகர்கள் முதல் சர்வதேச ரசிகர்கள் வரை  கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று தோனி கோப்பையை வென்று வருவார்எ ன அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக, டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. அதே வேளையில், ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான தோனிக்கு, அடுத்த ஆண்டு 40வது வயதை எட்டும் நிலையில், அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறி யானது. அதையும் மீறி பிசிசிஐ வாய்ப்பளித்தால், அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும், இதனால் தனது இமேஜ் பாதிக்கப்படகூடும் என தோனி யோசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதுபோன்ற எந்தவொரு விமர்சனத்துக்கு உள்ளாக்கிவிடக் கூடாது என்று நோக்கத்தில், சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக,  74வது சுதந்திர தினமான இன்று (2020 ஆகஸ்டு 15ந்தேதி) தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர் மகேந்திரசிங் தோனி. உலகம் முழு வதும் ரசிகர்கள் கொண்டவர். அவரது  பொறுமை, வெற்றி தோல்வி குறித்து அலட்டிக்கொள்ளாத நடவடிக்கை, நெருக்கடியான நேரத்தில் அணியின் வெற்றிக்கு வித்திடும் அவரது செயல்,  அவரது ஹெலிகாப்டர் ஷாட்,  நெருக்கடிகளை அவர் சமாளிக்கும் விதம், அவரை  ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கும் வகையில் புகழை வாரித்தந்தது.

இந்திய கிரிக்கெட்ட வரலாற்றில்  தனி அத்தியாயமாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக   இன்று திடீரென அறிவித்து இருப்பது அவரது ரசிகர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருந்தாலும், தோனியின் ஆட்டம் ஐபிஎல்லில் தொடரும் என்றே நம்பப்படுகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் தலைமை, தோனியின் கேப்டன்ஷிப் சிஎஸ்கேவில்  தொடரும் என்று அறிவித்துள்ள நிலையில், தோனி தொடர்ந்து சிஎஸ்கே சார்பில்,  ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்துவார்  என்பதற்காக ‘விசில்’ போடலாம்…