டில்லி:

குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி டிடிவி தொடர்ந்த வழக்கில், குக்கர் சின்னம் ஒதுக்கியும், அவர் கேட்டிருந்த கட்சி பெயர் குறித்து  பரீசிலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் கடந்த 9ந்தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், குக்கர் சின்னம் விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யாரேனும் வழக்கு தொடர்ந்தால், தங்கள் கருத்தை கேட்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், தனக்கு ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,  அனைத்திந்திய அம்மா அண்ணா திமுக, எம்ஜிஆர் திமுக, எம்ஜிஆர் அம்மா திக ஆகிய பெயர்களில் ஒரு பெயரை தனக்கு ஒதுக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன்‘ சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த  மனுமீதான  விசாரணையின்போது, டிடிவிக்கு குக்கர் சின்னத்தையும் ஒதுக்கியும், அவரது கட்சி குறித்த கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கும்படியும்  தேர்தல் ஆணையத்துக்கு டில்லி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.