சென்னை:

தேனி மாவட்டம்  குங்கணி மலைபகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள்  காட்டுத்தீயில் சிக்கி பலர் இறந்துள்ள நிலையில், மலையேற்றத்துக்கு அழைத்துச் சென்ற சென்னை டிரெக்கிங் கிளப் இரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் ஈரோடு, கோவை பகுதியை சேர்ந்த பெண்களை தேனி பகுதியில் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு, சென்னையை சேர்ந்த  டிரெக்கிங் கிளப் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் தீக்காயம் காரணமாக தேனி, போடி, மதுரை அரசு மற்றும தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பாலவாக்கம் பகுதியில்  வீடு ஒன்றில்,செயல்பட்டு வந்த சென்னை ட்ரக்கிங் கிளப் இரவோடு இரவாக மூடப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் இதனை நடத்தி வருவதாகவும்,  இந்த நிறுவனத்தில் தன்னார்வலர்களான நிஷா, திவ்யா என்ற 2 பேர் தலைமையில் தான் குரங்கணி மலைக்கு சென்னையில் இருந்து 27 பேர் மலையேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெறாமல் சென்றதாகவும்,  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கென சிறப்பாக இந்த மலையேற்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.