டெல்லி: சாமியார்களின் சர்ச்சை பேச்சு நாட்டுக்கு சாபக்கேடாக அமையும் என்று பிரதமர் மோடிக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்து சாமியார்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பல சாமியார்கள், இந்துமதத்தை உயர்த்தி பேசியதுடன், மற்ற மதம் மற்றும் மத மாற்றத்தை கண்டிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியதாக தகவல் வெளியானது. இதுபோல டெல்லியில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டிலும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு, 76 வழக்கறிஞர்கள் கூட்டாக பரபரப்பு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்கள். அதையடுத்து, சாமியார்களின் சர்ச்சைக்குரிய பேச்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 5 முன்னாள் ராணுவ அதிகாரிகள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், நாட்டிற்குள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீறுவது விரோதமான வெளிப்புற சக்திகளை ஊக்குவிக்கும். வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாம் அனுமதிக்க முடியாது – இது உள்நாட்டுப் பாதுகாப்பின் கடுமையான மீறல்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் சமூகக் கட்டமைப்பைக் கிழித்துவிடும்.
இந்துக்கள் ஆயுதங்களை ஏந்த செய்வது நமது சொந்த குடிமக்களின் இனப்படுகொலையில் இராணுவத்தை பங்கு கொள்ளுமாறு கேட்பதற்கு சமம், இது கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.