சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழக முதல்வரின் தாயார் மறைந்த தவுசயம்மாள் குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக திமுக எம்.பி.யும், துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.  இன்னும் சில நாட்களே வாக்குப்பதிவுக்கு இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இந்த நிலையில், கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக எம்.பி. ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதன் காரணமாக ஆ ராசா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடந்த 27-ம் தேதி புகார் அளித்தது.

தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து  ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்கத் தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.