மதுரை:
பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 கிலோமீட்டருக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மதுரை நகருக்குள் உள்ள பயணிகள் திருச்சி, சென்னை பகுதிகளுக்கு நெரிசல் இல்லாமல் விரைவாக செல்லும் நோக்கில் இந்த பாலம் கட்டப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஒரு தூணுக்கும் மற்றொரு தூணுக்கும் இடையே 35 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் ஒரு பகுதியைத் தூணுடன் இணைக்கும் பணியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பாலத்தை தூக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்து விபத்து நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் இரண்டாவது நாளாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலம் இணைப்பு பணியின் போது ஹெரிடரை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 160டன் ஹெரிடரை தூக்கி நிறுத்த 200டன் ஹைட்ராலிக்கு பதிலாகக் குறைவாக பயன்படுத்தப்பட்டது என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

மேலும் பேசிய அவர், முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்து காரணம் என்று குற்றம் சாட்டினார்.