சென்னை: சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்வோர் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்” “காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்” சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்து உள்ளார்.
சென்னையில் அடையாறு, அண்ணா நகர், கோயம்பேடு, மாதவரம், திருவான்மியூர் உள்பட அனைத்து பகுதிகளில் அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வருகிறது. அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, கஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என மாவட்ட சித்தார்த் ஜகடே அறிவித்து உள்ளார்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
23.09.2023 மற்றும் 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவித்துள்து.
ஆனால், இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, சின்னமலை, சைதேப்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழையும், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எம்.ஆர்.சி நகர் அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையில் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காலை 10 மணி வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
21.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.