சென்னை:
தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.ஜோசப் விக்டர்ராஜ், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாண வாக்குமூலங்கள் அடிப்படையில் அவர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், எத்தனை பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பது குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் 3 ஆயிரத்து 559 வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 466 வேட்பாளர்கள் (13 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. 207 வேட்பாளர்கள் (6 சதவீதம்) மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

தி.மு.க.வில் 136 வேட்பாளர்கள் (76 சதவீதம்) மீதும், அ.தி.மு.க.வில் 46 வேட்பாளர்கள் (24 சதவீதம்) மீதும், காங்கிரஸ் கட்சியில் 15 பேர் மீதும் (71 சதவீதம்), பா.ஜ.க.வில் 15 பேர் மீதும் (75 சதவீதம்), பா.ம.க.வில் 10 பேர் மீதும் (44 சதவீதம்), தே.மு.தி.க.வில் 18 பேர் மீதும் (30 சதவீதம்) குற்ற வழக்குகள் உள்ளன.

தி.மு.க.வில் 50 பேர் மீதும், அ.தி.மு.க.வில் 18 பேர் மீதும், பா.ஜ.க.வில் 8 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 6 பேர் மீதும், தே.மு.தி.க.வில் 8 பேர் மீதும், பா.ம.க.வில் 5 பேர் மீதும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில், அ.தி.மு.க.வில் 164 பேரும், தி.மு.க.வில் 155 பேரும், காங்கிரஸ் கட்சியில் 19 பேரும், பா.ஜ.க.வில் 15 பேரும், தே.மு.தி.க.வில் 19 பேரும், பா.ம.க.வில் 14 பேரும் அடங்குவர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களில் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளது.

அதிக சொத்து உள்ள வேட்பாளர்களில் அம்பை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையா (ரூ.246 கோடி) முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் சென்னை அண்ணாநகர் தி.மு.க. வேட்பாளர் எம்.கே.மோகனும் (ரூ.211 கோடி), 3-வது இடத்தில் கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.மகேந்திரனும் (ரூ.161 கோடி) உள்ளனர்.

அதிக ஆண்டு வருமானம் உள்ள வேட்பாளர்களில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் (ரூ10.43 கோடி) முதலிடத்தில் உள்ளார். 23 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்களில் ஆயிரத்து 731 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 61 பேர் எழுதப்படிக்க மட்டுமே தெரிந்தவர்கள். 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள். வேட்பாளர்கள் குறித்த முழு விவரங்களை www.adrindia.orgஎன்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றனர்