சென்னை:
துபாயில் இருந்து சரக்கு கண்டெய்னர்களில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதா என்று சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுதும் சோதனை நடத்தினார்கள். தற்போதும் சோதனை தொடர்கிறது.
சென்னை துறைமுகத்திற்கு வந்த ஒரு கண்டெய்னரில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுவதும் சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய கண்டெய்னர்களை சோதனை செய்தனர்.
கடந்த (பிப்ரவரி) மாதம் 24ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நோட்டுக்கள பதுக்கி வைத்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், “ இந்த நோட்டுக்கள் துபாயில் இருந்து கண்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன” என்று தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் சென்னை துறமுகத்தில் வந்திறங்கிய கண்டெய்னரில் கள்ள நோட்டுகள்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு ஸ்கேனர்கள் மூலம் கண்டெய்னர் லாரிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. துறைமுகத்தில் இருந்து எந்தவொரு கன்டெய்னரையும் வெளியே அனுப்பக் கூடாது என அவசர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே துறைமுகத்தில் கண்டெய்னர்களை கையாள்வது நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் நுழையும் பிரதான வாசல் மூடப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்தில் கண்டெய்னர்களின் நெரிசல் அதிகரித்துள்ளது. துறைமுக வாயில் மூடப்பட்டதால், எண்ணூர் கடற்கரை சாலை, எர்ணாவூர், மணலி சாலை, ஜி.என்.டி., சாலை முழுக்க கண்டெய்னர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அதே நேரம், ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கன்டெய்னர்கள், கடும் சோதனைகளுக்குப் பிறகு கப்பலில் ஏற்றப்பட்டுகின்றன.
துறைமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “கடந்த மார்ச் 1ம் முதல் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கண்டெய்னர்களும் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் பெட்டிகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இறக்குமதி நிறுத்தப்பட்டதால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளாத வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையே, “கண்டெய்னரில் பணம் கடத்தி வரப்பட்டிருப்பது குறித்து அதிகாரிகளுக்கு வந்த தகவல் உண்மைதான். ஆனால் அவை கள்ள நோட்டுக்களாக இருக்க வாய்ப்பில்லை. விரைவில் நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் தர ஒரு தரப்பு கொண்டுவந்திருக்கும் பணம்தான் அது” என்றும் ஒரு யூகச்செய்தி உலவுகிறது.