தஞ்சை: ”நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயல்” என்றும், தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல என தஞ்சையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல
- தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல; எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு
- இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி
தஞ்சாவூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விடுதலை ஆசிரியர் கி. வீரமணி தொகுத்துள்ள “தாய்வீட்டில் கலைஞர்” நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் விருதினை கி.வீரமணி வழங்கினார்.
நிகழ்ச்சில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், தி.க.வும் – தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி இருந்தார்கள்.
அந்த உரிமைக்குரிய – அத்தகைய பகுத்தறிவுப் பகலவன் நம்முடைய தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் கழகம்தான், தலைவர் கலைஞருக்கு தாய் வீடு – என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞருக்கு தாய்வீடு – இது மிகமிக பொருத்தமான தலைப்பு. தலைவர் கலைஞருக்கு மட்டுமல்ல; எனக்கும் திராவிடர் கழகம்தான் தாய்வீடு. தாய்வீட்டில் கலைஞர்’ என்ற நூலை வெளியிடுவதற்காக மட்டுமல்ல; ‘நானும் என் வீட்டுக்குச் செல்கிறேன்’ என்ற உணர்வோடுதான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக, திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் அழைத்தால், எங்கும், எப்போதும், எந்த நேரத்திலும் செல்வேன். காரணம், என்னைக் காத்தவர் – இன்றைக்கும் காத்துக் கொண்டிருப்பவர். அதிலும் குறிப்பாக, மிசா காலத்தில், அந்த இருட்டறையில் எனக்கு தைரியம் கொடுத்தவர்தான் அய்யா ஆசிரியர் அவர்கள்.
‘தந்தை பெரியார் அவர்களும் – பேரறிஞர் அண்ணா அவர்களும் இல்லாத இந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணிதான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் இவர்களோடு, தலைவர் கலைஞர் அவர்களும் இல்லாத நேரத்தில் எனக்கு கொள்கை வழிகாட்டியாக இருப்பவர், அய்யா ஆசிரியர் அவர்கள்தான்!
அதனால்தான், ‘நான் போகவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்’ என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் நேற்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன்; நாளையும் சொல்வேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய நேரத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘திராவிடர் கழகத்துக்கு போட்டியாக அல்ல. அதே கொள்கையை வேறொரு பாணியில் சொல்வதற்காகத்தான். அந்தக் கொள்கையைச் செயல்படுத்திக் காட்டுவதற்காகத்தான்’ என்று மிக தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். தி.க.வும் – தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தி.க.வும் – தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று சொன்னார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்.
தற்போதைய மோடி அரசு, மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி – நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறது என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்ல, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிக் கருத்தியலாக, கூட்டாட்சிக் கருத்தியல் மலர வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் உரிமை பெற்றவைகளாகவும், அனைத்து மாநில மொழிகளும் ஒன்றிய ஆட்சி மொழியாக உயர்ந்து நிற்க வேண்டும். அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும் மதிப்பும் இருக்க வேண்டும். இதுதான் இந்திய ஒன்றியமும் – அதில் உள்ளடங்கிய தமிழ்நாடும் இயங்க வேண்டிய முறை! அத்தகைய கூட்டாட்சிக் கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். து அரசியல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி! தேர்தல் வெற்றியை மட்டும் கணக்கில் கொண்டு இதனை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப் போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் செயல்படுகிறோம்.
தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். மீட்கப்பட்டே தீர வேண்டும். கல்வி உரிமை – நிதி உரிமை – சமூகநீதி உரிமை – மொழி உரிமை – இன உரிமை – மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைக்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறார்கள். மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி – நாடாளுமன்றத் தொகுதியின் எண்ணிக்கையைக் குறைக்கும் சதிச்செயலை அரங்கேற்றப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தியதற்குத் தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி எண்ணிக்கையை குறைக்கப் போகிறார்கள். 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்கள் என்றால் நம்முடைய உரிமையை எடுத்துச் சொல்ல – உரிமையை நிலைநாட்டச் செல்கிறார்கள் என்று பொருள். இந்த எண்ணிக்கையானது கூட வேண்டுமே தவிர – குறையக் கூடாது.
அதே போல் மகளிருக்கான 33விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பா.ஜ.க. முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என்று சொல்வதே இதை நிறைவேற்றாமல் இருக்கும் தந்திரம்தான். அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மகளிர் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது என்பது பா.ஜ.க.வின் உயர் வகுப்பு மனோபாவம்! காலப்போக்கில் பட்டியலின இடஒதுக்கீட்டையும் காலி செய்துவிடும் ஆபத்தும் இதில் இருக்கிறது.
தமிழ் மொழி காக்க – தமிழினம் காக்க – தமிழ்நாட்டைக் காக்க – இந்தியா முழுமைக்கும் சமதர்ம – சமத்துவ – சகோதரத்துவ – சமூகநீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்கிறேன் என்பதுதான் எனக்கு திராவிடர் கழகம் நடத்தி இருக்கும் இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி!
ஏதோ சாதித்துவிட்டான் – நினைத்ததை முடித்துவிட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல. இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக்கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை மிகச் சரியாக – முறையாகப் பயன்படுத்துவேன்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கை கோட்பாடுகளை, சட்டமன்ற நாடாளுமன்ற – மக்கள் மன்றங்களில் நாங்கள் ஒலிப்போம். மக்கள் மன்றத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் – திராவிடர் இயக்கத் தோழர்கள் – பெரியாரின் தொண்டர்கள் தொய்வின்றித் தொடருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
‘வீரமணி வென்றிடுக!’ என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அதையே நானும் வழிமொழிகிறேன். அய்யா ஆசிரியர் அவர்களே, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும். அவருக்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. ஓய்வெடுத்துப் பணியாற்றுங்கள். பெரியாரையும் கலைஞரையும் கடந்தும் நீங்கள் வாழ வேண்டும்.
‘பெரியாரின் ஆட்சிக்கு நாங்கள் காரணகர்த்தாக்கள். பெரியாரின் மாட்சிக்கு வீரமணிதான் காரணம்’ என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். பெரியாரின் மாட்சி இன்னும் பரவ நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்.
இவ்வாறு பேசினார்.