டில்லி,
இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரபாக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது சோனியா காந்தி இருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவோ தீபாவளி முடிந்ததும் ராகுல் தலைமையேற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில், டில்லி அக்பர் சாலையில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், ராகுலை எதிர்த்து யாரும் போட்டியிடாத பட்சத்தில் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.
அதைத்தொடர்ந்து அவர் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று நடைபெறும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இதற்கான முடிவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுலுக்கு போட்டியாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில் டிசம்பர் முதல் வாரத்திலேயே ராகுல்காந்தி தலைவராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
குஜராத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 9ம்தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்குமுன்பாகவே ராகுல் பொறுப்பேற்பார் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.