சென்னை :

மூக ஊடகத் துறையில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, சமூக ஊடகப் பிரிவின் தலைவர் லட்சுமிகாந்தன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி இராம. சுகந்தன், விஜய் வசந்த், எஸ்.சி. பிரிவின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலராமன், முருகானந்தம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன், சொத்து மீட்பு குழு உறுப்பினர் ரஞ்சன் குமார், மற்றும் , லட்சுமி ராமகிருஷ்ணன், ஆனந்த் சீனிவாசன், கடல் தமிழ்வாணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வாறு ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி :

“தமிழக காங்கிரஸ் ஏர்கலப்பை பேரணியை 22ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது 28ஆம் தேதி தமிழகத்தினுடைய எல்லா மாவட்டங்களிலும் ஒரு தொகுதியில் ஏர்கலப்பை பேரணி நடைபெறும், கட்சியினுடைய அனைத்து தலைவர்களும் ஒவ்வொரு தொகுதியிலும் கலந்து கொள்வார்கள்

இந்த பேரணியை ஏன் நடத்துகின்றோம் என்று சொன்னால் இந்தியாவிலும் தமிழகத்திலும் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வில்லை, மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், கல்விக்கூடங்கள் மூடிக்கிடக்கிறது, தொழிற்சாலைகள் மூடிக் கிடக்கின்றன, ஆறு மாத காலமாக வறிய மக்கள் வருமானம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் ஆனால் இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக பாரதிய ஜனதா வேல் யாத்திரையை துவங்கியிருக்கிறது

முருகப்பெருமான் நன்றாக இருக்கின்றார், முருகப்பெருமான் கையில் இருக்கும் வேலும் நன்றாக இருக்கின்றது, முருகப்பெருமானுக்கு எந்த குறையும் இல்லை, குறை உள்ளவர்களுக்கு நிறைவை தருகிறார் எனவே இந்த நேரத்தில் அவருடைய வேலை எடுத்து கொண்டு தமிழகத்தில் சுற்றி வருவது மக்களுடைய கவனத்தை திருப்புவதற்காகவும் மக்களை திசை திருப்புவதற்காகவும் பாஜக மேற்கொண்டிருக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது

எனவே இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தமிழக காங்கிரஸ் ஏர் கலப்பை யாத்திரையை 22ம் தேதியில் இருந்து தொடங்குகிறது விவசாயிகளும் பொது மக்களும் இதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பாரதிய ஜனதா பொய்யான தவறான உண்மைக்குப் புறம்பான விஷயங்களை சொல்லி வருகிறார்கள்

காங்கிரஸ் கட்சி காந்தியினுடைய நடை முறையை ஒட்டி நேர்மையான, உண்மையான, மக்களுக்கு தேவையான விஷயங்களை நாங்கள் சொல்லி வருகிறோம்

பெரிய அளவில் காங்கிரஸ் தோழர்கள் சமூக வலைதளங்களில் பங்கெடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் நடத்தி அதன் மூலமாக ஏராளமான இளைஞர்களையும் கொண்டு வந்திருக்கிறோம்

இனிமேல் சமூக ஊடகங்களில் காங்கிரஸ்னுடைய குரல் ஓங்கி ஒலிக்கும்” என தெரிவித்தார்