சென்னை: ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று சட்மன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 9ந்தேதி) தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கூட்டம் முடிவதற்குள் சர்ச்சை வெடித்தது. தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காத ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையையும், பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடாமல் அந்த பத்தியை முற்றிலுமாக தவித்தார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில் , ஆளுநர் கூட்டத்தொடர் முடிவதற்குள் பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
‘இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிக செயலை கண்டித்து ஆளுநருக்கு எதிரான காங்கிரஸின் தனி நபர் தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம். ஒன்றிய அரசில் மோடி செய்வதை தமிழ்நாட்டில் அவரது வாரிசாக ரவி செய்து வருகிறார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு பேரவை முடியும் முன்பே பாதையில் வெளியேறி பேரவை வரலாற்றில் இல்லாத மோசமான கலாச்சாரத்தை அவர் கொண்டு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.