சுனார்:

சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் என  பிரியங்கா காந்தி கூறினார். சோன்பத்ரா சம்பவத்துக்கு பாரதிய ஜனதா அரசும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறில் இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கிச் சண்டையில், அந்த கிராமத்தை சேர்ந்த 10பேர் பலியான நிலையில் பலர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து சாலையில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டு மிர்சாபூரில் தங்க வைக்கப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என்று பிடிவாதமாக பிரியங்கா இருந்து வந்தநிலையில், சுமார்  24 மணி நேரத்துக்குப் பிறகு சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், வந்து பிரியங்காவை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டது.

அவர்களை சந்தித்து பேசிய பிரியங்கா  அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,  சோன்பத்ரா சம்பவத்துக்கு பாரதிய ஜனதா அரசும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முழுபொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

யோகி தலைமையிலான  மாநில பாஜக அரசு  மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி வருவதாகவும், மாநில  ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களை  காப்பாற்றவே அரசு இருக்கிறது. ஆனால், அதை பாஜக அரசு செய்ய தவறி விட்டது என்றும் குற்றம் சாட்டினார்.