சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்  என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்எ  திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், கவர்னர் ஆர்என்.ரவிக்கு எதிராக, சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு  மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கே.எஸ். அழகிரி பேசினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும்  செய்தியாளர்களை சந்தித்த  காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் கட்சி போட்டியிடும். ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்று வென்ற தொகுதி. கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். வேட்பாளர் யார் என்பதை 3 நாட்களில் அறிவிக்க உள்ளோம்.

வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, கூட்டணி கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க.. விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுவுடைமை கட்சி தலைவர்களை இன்று மாலை முதல் சந்திக்க உள்ளோம். அனைத்து கூட்டணி கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிக்கு அவர்கள் ஆதரவை கோர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.