புதுடெல்லி:

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டத்துக்கு , ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டம் கொண்டு வரப்படும் என கடந்த திங்கள்கிழமை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.


இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ‘ஸ்க்ரோல்.இன்’ இணையத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத திட்டம் பயனாளிகள், சமூகப் பொருளாதார சாதி கண்கெடுப்பு தரவுகள் மற்றும் பயனாளிகளை அடையாளம் காண உதவும் மற்ற தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்காக பயனாளிகளின் குடும்பங்கள் குறித்த தரவுகளை மாநில அரசுகளின் உதவியுடன் பயன்படுத்துவோம். இந்த திட்டத்துக்கான நிதி ஆதாரத்தை பெருக்குவோம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவு மற்றும் வருடாந்திர பட்ஜெட் செலவினங்களின் அளவு அடிப்படையில் பார்க்கும்போது, இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது பிரச்சினை இல்லை என்று நம்புகின்றோம்.

இந்த திட்டத்தை மாநில அரசுகளின் நிதி பகிர்வோடு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவோம். இதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்க விருபுகின்றோம்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அளவு ரூ.200 லட்சம் கோடி. சராசரி வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ.20 லட்சம் முதல் 25 லட்சம் கோடி வரை இருக்கும்.

இன்னும் 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.201- 275 லட்சம் கோடியை கடந்துவிடும். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிலிருந்து ஆண்டுதோறும் 1.5 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை ஒதுக்குவது பெரிய விசயமல்ல.

இந்தத் திட்டத்தை ஒரே நாளில் செயல்படுத்திவிட முடியாது. படிப்படியாகத் தான் செயல்படுத்த முடியும்.

இதுபோன்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் பாஜக அரசுக்கு ஆர்வமில்லை. உணர்வுப்பூர்மாக இல்லாததும், அலட்சியப் போக்கும் அவர்களது பண்பு.

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாத  திட்டத்தின் மூலம் சீரான வளர்ச்சி,மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.ஆனால், இது போன்ற திட்டத்தை செயல்படுத்தி வறுமையை ஒழிக்க பாஜகவினர் விரும்பவில்லை என்றார்.