காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் மற்றும் உதய்பூர் சம்பவம் தொடர்பாக இந்த இருவரும் வெளியிட்ட கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் இந்திய ராணுவத்தை சீர்திருத்த அக்னிபாத் திட்டம் உதவும் என்றும் இது அதற்கான முதல் படி என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், “உட்கட்சி ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். அக்னிபாத் திட்டம் குறித்து மனிஷ் திவாரி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து இதனை அவர் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த மனிஷ் திவாரி, “அந்த கட்டுரையை ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் முழுவதுமாக படித்திருந்தால் அது எனது சொந்த கருத்து என்று பதிவிட்டிருந்தது தெரிந்திருக்கும்” என்று பதிவிட்டதுடன் அந்த பதிவின் கடைசியில் இது கட்டுரை ஆசிரியரின் சொந்த கருத்து என்று பதிவிடப்பட்டிருந்த புகைப்படத்தையும் அந்த ட்வீட் உடன் இணைத்திருந்தார்.

தவிர, மனிஷ் திவாரி கூறியது அவரது சொந்த கருத்து என்றும் இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பில்லை என்று ஒடிசா-வைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி உல்கா பதிவிட்ட ட்வீட்-க்கு பதிலளித்த மனிஷ் திவாரி “இதுகுறித்து நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் சிறுவனாக கால்சட்டையுடன் சுற்றிவந்த காலம் முதல் நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன்” என்று தன்னை விட 14 வயது இளையவரான சப்தகிரி உல்கா-வுக்கு பதிலளித்திருந்தார்.

அதேபோல், உதய்பூர் படுகொலை சம்பவம் மற்றும் மகாராஷ்டிரா அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் பதிவிட்டிருந்த கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஆச்சார்யா “தார்மீக அடிப்படையில் உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார், இதற்கு பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ் “இது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல இது அவரது சொந்த கருத்து” என்று குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் சொந்த கருத்துகளை கூற தடையில்லை என்றபோதும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை கூறும் போது கட்சியின் மற்ற நிர்வாகிகளை சர்ச்சைக்கு உரிய வகையில் விமர்சிப்பது மற்றும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது மிகவும் அபயாயகரமானது.

இதனால் சர்ச்சையில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்து உடையவர்கள் இதுபோன்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் உரிய வகையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த ஆலோசனை வழங்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.