கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால் விவசாய துறை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 28, 29ந்தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதையடுத்து, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பள்ளி குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட, சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், பம்புசெட், மற்றும் லாட்டரி ஆகியவற்றுக்கு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12% முதல் 18% ஆக உயர்த்தி இருப்பது, விவசாயிகள் மற்றும் மோட்டார் உற்பத்தியாளர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மோட்டார் பம்ப்செட் உற்பத்தி என்றாலே கோவைதான். நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பம்ப்செட்டுகளில் 60% கோவையில்தான் உற்பத்தியாகிறது. பெரு நிறுவனங்களைத் தாண்டி, சுமார் 3,000 சிறு, குறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங் கள் கோவையில் உள்ளன. தற்போது ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டு உள்ளதால், சிறு, குறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பம்புசெட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு விவசாய பம்ப்செட்டின் சராசரி குறைந்தபட்ச விலை ஜிஎஸ்டி தவிர்த்து ரூ.40ஆயிரம் ஆகும் என்றும், இது விவசாயத்துறையை பாதிக்கும் என்று கோவை தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கார்த்திக் தெரிவித்து உள்ளார். ஜிஎஸ்டி வரி உயர்வு, சிறுகுறு தொழிற்சாலைகளுக்கு பேரிடியாக உள்ளது என்று தொழில்துறை பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய மோட்டார் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.வி.கார்த்திக் ஜிஎஸ்டி உயர்வு காரணமாக, மோட்டார்களின் விலையும் உயரும் நிலை உருவாகி உள்ளது. சராசரியாக 10% உயர்த்தப்படுகிறது.  இந்த விலை உயர்வு காரண மாக விவசாயிகள் கூடுதல் தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

தமிழகத்தில் 23 லட்சம் இலவச விவசாய இணைப்புகள் உள்ளன. விவசாயிகளின் கொள்முதல் திறன் ஏற்கனவே அழுத்தத்தில் உள்ளது. தற்போது, ஜிஎஸ்டியை அதிகரித்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும். அதனால், பம்புசெட் மீதான ஜிஎஸ்டி மீண்டும்  12% அடுக்குக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜிஎஸ்டி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த திருப்பூர் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத் தலைவர் சி.சிவக்குமார்,  விவசாயிகள் பம்ப் வாங்குவதை நிறுத்தும்போதோ அல்லது மாற்று வழி தேடும்போதோ உற்பத்தியாளர் பாதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி உயர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு குடிசை மற்றும் சிறு நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் ஜே. ஜேம்ஸ்,  மத்திய அரசின் இந்த நடவடிக்கை சிறு மற்றும் குறு நிறுவனங்களின் செயல்பாடுகளை பாதித்துள்ளது. இந்த அலகுகளுக்கு அரசாங்கம் எந்த ஆதரவுத் திட்டத்தை யும் வழங்குவதில்லை மற்றும் இந்தத் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.