குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தலைவர் ராகுலை அனைவரும் ஏற்கும்படியான “ரியல் தலைவராக” உருவாக்கி உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சோனியாவுக்கு அடுத்து காங்கிரஸ் தலைவராக ராகுல்தான் வருவார் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான். ஆனால் ராகுல் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.

தவிர ராகுலின் பேச்சு மற்றும் திட்டமிடல்களில் முன்னேற்றம் தேவை என்ற ஒரு கருத்து ஆரம்பத்தில் பலருக்கும் இருந்தது.

ஆனால் பலரும் வியக்கும் வகையில் ராகுல் பேச்சு, மிகச் சிறப்பாக மாறியது. புள்ளிவிவரங்களை கொட்டினார். நுணுக்கமான கேள்விகளை பாஜகவுக்கு வைத்தார். பாஜகவின் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில்தான்  குஜராத் தேர்தல் வந்தது. மாநிலம் முழுதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்தார் ராகுல். அதோடு தேர்தல் திட்டமிடல்களை தனது நேரடி பார்வையில் செய்தார்.

அதற்கு எதிர் நடவடிக்கையாக பாஜகவும் பலவித திட்டமிடல்களை செய்தது. மோடி கடும் பிரச்சாரம் செய்தார். (அவரது பேச்சில் மாநில முன்னேற்றம் என்பதை விட ராகுல் மீதான தாக்குதலே அதிகம் இருந்தது.) மத்திய மாநில அமைச்சர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.

“கடந்த தேர்தலை விட, கூடுதலான இடங்களை கைப்பற்றுவோம்” என்று பாஜக முழங்கியது.

ஆனால் இப்போது தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டுருக்கும் நேரத்தில் நிலைமை வேறாக இருக்கிறது.

ஆரம்பம் முதலே பாஜக முன்னிலையில் இருந்தாலும், அக் கட்சியை மிரள வைக்கும் வகையில் தொடர்ந்து விரட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக அமோக வெற்றி பெறும் என்று வெளியானதால் உற்சாகத்தில் இருந்த பாஜகவினர் இப்போது துவண்டுபோயிருக்கிறார்கள்.

இதற்கு ராகுலின் பிரச்சாரம் முக்கிய காரணம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்று மார் தட்டிக் கொண்டது பாஜக, ஆனால் என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது தான் ராகுலின் முக்கியமான கேள்வியாக… பிரச்சாரமாக இருந்தது.

புள்ளிவிவரங்களோடு பல தகவல்களை அவர் மக்களுக்குத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு எல்லாமே பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் பேசினார் ராகுல்.

ராகுல்காந்தி தலைவராவார் என்ற முடிவான பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. ஆகவே படையின் தளபதியாக ராகுலைத்தான் மக்கள் பார்த்தார்கள்.

அந்த நம்பிக்கையை நிறைவேற்றியிருக்கிறார் ராகுல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குஜராத்தில் 1985ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் வெற்றி பெற்றி பெற்றது. . அதன் பிறகு 32 ஆண்டுகளாக 60 தொகுதிகள் என்ற அளவிலேயே வெற்றி பெற்றுள்ளது. 2012 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வென்றுள்ளது.

இந்த நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 66 இடங்களைக் கடந்து முன்னிலை நிலவரம் சென்று கொண்டிருக்கிறது.

எனவே ராகுல்காந்தியின் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரம் கைகொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட ராகுல் காரணமாக இருப்பார் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.