லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில், உத்திரப்பிரதேச மாநிலத்தில், முலாயம்சிங் யாதவ் குடும்பத்திற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை நிறுத்தாது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில், இந்திரா காந்தி குடும்பத்தினருக்கு எதிராக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று முடிவு செய்ததால், பதில் மரியாதைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.

முலாயம் சிங் யாதவ் நிற்க உள்ளதாய் கூறப்படும் மெயின்புரி, அகிலேஷ் யாதவ் நிற்கவுள்ளதாய் கூறப்படும் ஆஸம்கர், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் நிற்கவுள்ளதாய் கூறப்படும் கன்னோஜ் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்களை நிறுத்தாது என்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, மாநிலத்தின் மொத்தம் 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பதில் மரியாதைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாய் கூறப்படுகிறது.

இந்த 2 கட்சிகளும் இந்த விஷயத்தில், கடந்த சில தேர்தல்களாகவே ஒன்றுக்கொன்று புரிந்துணர்வுடன் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி