நாளை காலை 11 மணிக்குள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துக்கொள்ள வராவிட்டால், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை கடந்த வெள்ளிக்கிழமை, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கொண்டுவந்தார். அத்தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த வாரத்தில் நடைபெற்ற நிலையில், இன்றும் அது தொடர்ந்தது. அப்போது, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் கட்சிகள் கொறடாவை நியமிப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை” என்று கூறி, காங்கிரஸ் உட்பட கட்சிகள் கொறடாவை நியமிப்பதோடு, அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அது பொருந்துமா என்பதை கொறடாவே முடிவெடுத்துக்கொள்ளலாம்” என்று சபாநாயகர் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தரப்பிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தரப்பிலும் கொறடாக்கள் நியமிக்கப்பட்டனர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சபாநாயகர் காலையில் உத்தரவிட்டிருந்த நிலையில், 11 மணி வரை மட்டுமே அவகாசம் கொடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் கொறடா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில், தற்போது சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே சிவகுமார், “கொறடா கொடுத்த அவகாசம் மற்றும் சபாநாயகர் கொடுத்த அவகாசம் நாளை காலை 11 மணி வரை இருக்கிறது. அதற்குள்ளாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சிக்கு திரும்பவேண்டும். ஒருவேளை திரும்ப தவறும் பட்சத்தில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்” என்று தெரிவித்தார்.

டி.கே சிவகுமாரின் கருத்துக்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.