டில்லி

கொரோனாவை எதிர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துடன் அணுகினால் காங்கிரஸ் உதவ தயாராக உள்ளதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்

கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் இந்தியாவைக் கடுமையாகப் பாதித்துள்ளது.  உலக அளவில் தினசரி பாதிப்பில் தற்போது இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டி பல வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.  இதுவரை 1.76 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு தற்போது 28.75 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு செய்தி ஊடகத்துக்கு இது குறித்து  பேட்டி அளித்துள்ளார்.  அவர் தனது  பேட்டியில், “காங்கிரஸ் கட்சி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதைத் தேசிய சவாலாகவும், அதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டு உள்ளது. கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மத்திய அரசு கொரோனா நெருக்கடியைக் கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளிடம் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அமைச்சர்கள் ஒரு போதும் கேட்பதில்லை.  மாறாக அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றனர்.

இந்தியாவை கொரோனாவின் 2வது அலை இந்தியாவைக் கடுமையாகத் தாக்கி உள்ளது. ஏற்கனவே நடந்த முதல் அலையின் பாதிப்பில் இருந்து மீள ஓராண்டு முடிவதற்குள் மீண்டும் பாதிப்பில் சிக்கி உள்ளோம்.  நான் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்.

ஆனால் அதற்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.  மேலும் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் ஆகியவை போதுமான அளவு இல்லை. அதையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒருமித்த மற்றும் வெளிப்படையான கருத்துக்களுடன் அணுகினால் கொரோனா எதிர்ப்புக்கு உதவத் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.