டில்லி

கொரோனா தடுப்பூசிகள் விலையைக் குறைக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.,

கொரோனா இரண்டாம் அலை பரவல் நாட்டில் மிகவும் அதிகரித்து வருகிறது.   எனவே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   அதை ஏற்ற மத்திய அரசு வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கும் 3ஆம் கட்ட தடுப்பூசி பணிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க உள்ளதாக அறிவித்தது.

அத்துடன் இந்த திட்டத்தை மேலும் எளிமையாக்க மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  அத்துடன் மருந்து நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50% மருந்தை மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50% மருந்தை மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்க அரசு உத்தரவிட்டது.

இதையொட்டி சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் புதிய விலையை அறிவித்தன.  இதில் பாரத் பயோடெக் தனது கோவாக்சின் தடுப்பூசியை மாநிலங்களுக்கு ரூ.600 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என விலை நிர்ணயம் செய்தன.  சீரம் இன்ஸ்டிடியூட் தங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாநிலங்களுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என விலை நிர்ணயித்தது.

இந்த இரு நிறுவனங்களும் மத்திய அரசுக்கு ரூ.150 விலையில் தொடர்ந்து வழங்க உள்ளதாகவும் அறிவித்தன.   இந்த விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இந்த கொள்ளை நோய் காலத்தைப் பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் அதிக லாபம் பார்க்க எண்ணுவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விலை குறித்து மத்திய அமைச்சரவை செயலர் ராஜிப் கவுபா தலைமையில் நேற்று நாடாளுமன்ற உயர்குழு விவாதித்தது.   அப்போது மத்திய அரசு தடுப்பூசி விலையைக் குறைக்க வேண்டும் என மருந்து நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.  எனவே கொரோனா தடுப்பூசி விலைகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.